ஈக்வடாரில் கைவிடப்பட்ட சடலங்கள் அட்டைப் பெட்டியில் அடக்கம்
குயிட்டோ: கொரோனா வைரஸ் தொற்றால், தென் அமெரிக்க கண்டத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஈக்வடாரும் ஒன்று. அங்கு மருத்துவமனைகளும் மிகக் குறைவு. அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான படுக்கையோ, வென்டிலேட்டர்களோ அங்கு இல்லை. இதனால், போதுமான சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு கல்லறைகளில் போதுமான இடமும் இல்லாததால், உயிரிழந்தவர்களின் சடலங்களை அவரது உறவினர்கள் மருத்துவமனைகளிலேயே விட்டுச் செல்கின்றனர். சில உடல்கள் வீடுகளிலேயே அழுகிய நிலையில் உள்ளன. பல இடங்களில் சாலையோரம் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டும், அட்டைப்பெட்டியில் திணிக்கப்பட்டும் உடல்கள் கிடக்கின்றன.
இது தொடர்பாக வைரலான வீடியோ ஒன்றில், தன் பெயர் கேப்ரியெல்லா எனக் கூறும் பெண், மூன்று நாட்களுக்கு முன் இறந்த தன் கணவரின் உடலை வீட்டிலிருந்து மீட்குமாறு அரசு அதிகாரிகளிடம் கெஞ்சுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறைப்படி புதைக்காமல், சாலைகளில் போட்டுள்ளதால், ஈக்வடாரில் மேலும் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பலரும் வருத்தம் தெரிவித்தனர
இதையடுத்து, உடல்களைத் தற்காலிகமாக பாதுகாக்க, மிகப்பெரிய கண்டெய்னர் அளவிலான மூன்று குளிர்சாதன பெட்டிகளை அந்நாட்டு அரசு பயன்படுத்த துவங்கியுள்ளது. பாரம்பரிய முறைப்படி மரத்தினாலான சவப்பெட்டியில் உடல்களை அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது சவப்பெட்டிகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதால், அட்டை பெட்டியால் செய்யப்பட்ட 4,000 சவப்பெட்டிகளை ஈக்வடார் அரசு தயார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடு ஈக்வடார். தற்போதைய சூழலை சமாளிக்க, அந்த நாடு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
கருத்துகள்