3 வேளை சாப்பாடு போட்டு..முடி வெட்டி.. ஆதரவற்றோரை அரவணைக்கும் புதுச்சேரி அரசு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சாலையில் வசித்த ஆதரவற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, அவர்களை அரசு பள்ளி ஒன்றில் தங்கவைத்து பராமரிப்பதுடன், அவர்களுக்கு முடித்திருத்தம் செய்து மூன்று வேளை உணவு அளித்து வரும் புதுச்சேரி அரசின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மூன்று வேளையும் உணவளிக்கும் புதுச்சேரி கலெக்டருக்கு நன்றி.. ரஷ்ய நாட்டவரின் நெகிழ்ச்சி - வீடியோ
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி - தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரியினுள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. சாலையோர ஆதரவற்றோர் இதனிடையே புதுச்சேரி ரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை வளாகங்கள், கடற்கரை சாலை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சாலையோரங்களில் ஆதரவற்றோர் ஏராளமானோர் வசித்துவந்தனர். ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் தவித்த அவர்களுக்குத் தன்னார்வலர்கள் பலர் தினமும் உணவு கொடுத்து வந்தனர். 3 வேளை சாப்பாடு மேலும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தொடர்ந்து அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, அவர்கள் பொதுவெளியில் நடமாடாமல் இருக்கவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில், அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து, தனி இடங்களில் தங்க வைத்து, புதுச்சேரி அரசு பாதுகாத்து வருகின்றது.
அரசுப் பள்ளியில் தங்க வைப்பு இந்நிலையில் மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 55 பேரும், சின்ன வாய்க்கால் வீதியில் உள்ள பான்சியானா பிரெஞ்சுப் பள்ளியில் 20 பேரையும் தன்னார்வலர்கள் உதவியுடன் புதுச்சேரி அரசு பராமரித்து வருகிறது. குறிப்பாக இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பலருக்கு தலை நிறைய முடியுடனும், அழுக்கு படிந்த தேகத்துடன் காணப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் முடித்திருத்தம், சவரம் செய்து, சோப்பு போட்டு குளிக்க வைத்தனர். புத்தாடைகள் அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களைக் கொண்டு கொரோனா தொற்று உள்ளிட்ட முழு உடல் பரிசோதனையும் மேற்கொண்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.
மேலும், அனைவருக்கும் தேவையான குடிநீர், குளிக்க, கழிப்பிட வசதிகள், மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகிழ்ச்சியில் ஆதரவற்றோர் இது தொடர்பாக ஆதரவற்றோர் கூறுகையில், தெருவோரம் தங்கியிருந்தோம். தற்போது எங்களை அழைத்து வந்து பத்திரமாக தங்க வைத்துள்ளனர். தேவையான சிகிச்சை, மூன்று வேளை உணவு அளிக்கின்றனர். இதனால் நாங்கள் வீட்டில் இருப்பது போல் உணர்கிறோம் என்றனர். புதுச்சேரி அரசின் இந்த செயலால் ஆதரவற்றோர் புத்துயிர் பெற்றுள்ளனர். புதுச்சேரி அரசின் இச்செயலுக்கு தற்போது பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்