கொரோனாவே ஓடிப்போ.. ட்ரோன் மூலம் கொரோனாவை விரட்டும் கடலூர் மாவட்ட நிர்வாகம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பறக்கும் ட்ரோன் மூலம் வீதி வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் புதுவிதமான முறையை கையாண்டு வருகின்றது மாவட்ட நிர்வாகம். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது. இந்த தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி, வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகமும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கடலூர் அரசு மருத்துவமனையில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தேவையான உடல் கவசங்கள், முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் 52 பேர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அந்தந்த சுகாதார செவிலியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடலூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுவிதமான முறையை கையாண்டு வருகிறது மாவட்ட நிர்வாகம். சாதாரண முறையில் கிருமி நாசினி தெளிக்கும் போது, அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக கிருமி நாசினி தெளிக்க முடியாத நிலையில் உள்ளதால், தற்போது ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக புதுப்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் ட்ரோன் மூலம் கிருமி நாசினியை தெளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
i
கருத்துகள்