மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு கிடையாது - அமைச்சர் தங்கமணி
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் துண்டிப்பு கிடையாது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. கொரேனைா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்சாரம் தடையில்லாமல் தர வேண்டுமென்ற முதல்வர் வேண்டுகோளின்படி மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். அத்தகைய பணியை செய்து வரும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகள்.
இரு தினங்களுக்கு முன் களப்பேரி, அந்தியூர் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மின் தடைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டது. தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்ற காரணங்களால் சுமார் 4500 மெகாவாட் மின்சாரம் வரை மீதமாகியுள்ளது. வீட்டிலிருப்போரின் தேவை அதிகரித்தாலும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், மத்தியில் இருந்து வரும் மின்சாரமே போதுமானதாக உள்ளது. பற்றாக்குறை இல்லாத காரணத்தால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு அனல்மின் நிலையம் மட்டும் பெயருக்காக இயங்கி வருகிறது.80 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 1912 என்ற அவசர எண் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி வரை மின் கட்டணமும் செலுத்தவில்லை என்றாலும் துண்டிப்பு இருக்காது.
கடந்த 4-5 நாட்களில் இந்த ஊரடங்கின் மூலம் 300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும் மக்கள் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது“ என்றார்.
கருத்துகள்