கொரோனா.. ஸ்டேஜ் 1ல் இருக்கிறோம்.. ஸ்டேஜ் 2வை நோக்கி செல்கிறோம்.. முதல்வர் பழனிசாமி விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதல்நிலையிலிருந்து இரண்டாவது நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது, தமிழகடத்த்தில் மூன்றாம் நிலை ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இந்த வைரஸ் காரணமாக மதுரையில் பலியானார். அதேபோல் இரண்டு பேர் கொரோனா வைரஸில் இருந்து பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் ஆறு பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வரும் முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
முதல்வர் பழனிசாமி தனது பேட்டியில், மக்களை காப்பதற்காகத்தான் நாங்கள் இங்கே பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் 144 தடை உத்தரவு இருக்கிறது. இதனால் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே செல்ல கூடாது. 21 நாட்கள் மக்கள் இதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.
மன அழுத்தம் கட்டுப்பாட்டு அறை
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தங்களை போக்கவே கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களது மன அழுத்தங்களை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள். அதேபோல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கொரோனா தொடர்பான சந்தேகங்கள், புகார்களை அளிக்கலாம்.
தமிழகம் முழுக்க படுக்கை வசதி
தமிழகத்தில் ஓமந்தூரார் மருத்துவமனை, கோவை சி.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் தலா 350 படுக்கை வசதி கொண்ட சிறப்பு கொரோனா வார்டு திறக்கப்பட்டு இருக்கிறது. இது இன்றில் இருந்து பயன்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் எல்லோரும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.
தனிமைதான் ஒரே வழி
கொரோனா அறிகுறி உள்ள எல்லோரும் தனிமையில் இருக்க வேண்டும். தனியாக இருப்பது மட்டுமே கொரோனாவை தடுப்பதற்கு ஒரே வழி.கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவின் போது இன்றியமையாத பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
ஸ்டேஜ் 2
கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதியுடன் இருக்க வேண்டாம். தமிழகத்தில் கொரோனா முதலாம் கட்டத்தில் தான் உள்ளது. இங்கே மூன்றாம் கட்டம் வந்துவிட்டது என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார். கொரோனா தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தை நோக்கி கொரோனா நகர்ந்து வருகிறது. அதனால் மக்கள் வீட்டில் இருந்தால் இதை கட்டுப்படுத்த முடியும். மக்கள் இதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும், என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
கருத்துகள்