தேர்தல் செலவை போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய சமூக ஆர்வலர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் துரை குணா. சமூக ஆர்வலரான துரை குணா, தொடர்ந்து ஆக்கிரமிப்பின் பிடிகளில் சிக்கி இருக்கும் குளங்களை மீட்பது உள்ளிட்டபல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறார்.சமீபத்தில், குளந்திரான்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வெட்டுக்குளத்தை மீட்க அரசு அதிகாரிகள் வேலைக்கு ஆட்கள் தேவை என்று பரபரப்பு போஸ்டர் ஒட்டி சிறை சென்று திரும்பினார். தற்போது குளமும் மீட்கப்பட்டது.
போஸ்டர் அடித்து ஒட்டிய சமூக ஆர்வலர்
அதைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில்தான், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தகவல் பலகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், `தேர்தல் செலவு அறிக்கை' என்ற பெயரில் என்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு அன்பும்..! நன்றியும்..! என்று கூறிபோஸ்டர் அடித்து ஓட்டியுள்ளார். துரை குணாவின் தேர்தல் செலவு அறிக்கை போஸ்டரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
போஸ்டர் ஒட்ட மைதா வாங்கிய செலவுமுதல் வாக்குசேகரிக்கச் செல்ல டூவிலருக்கு பெட்ரோல் போட்டது வரை கணக்குக் காட்டி உள்ளார்.
இதுபற்றி துரைகுணாவிடம் பேசினோம்,``எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஊராட்சி மக்களுக்காகப் போராடுறேன்.பொறுப்பு இருந்தால், ஊராட்சிக்கு எத்தனையோ நல்ல திட்டங்களைக் கொண்டு வரமுடியும். அதுக்காகத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். மக்கள் என்னை ஓட்டு போட்டு வெற்றி பெற வைக்கலை. சின்ன வருத்தம் இருக்குது. ஒவ்வொரு முறையும் மக்களை சந்திக்கும்போது, `வெற்றிபெற்ற பின்பு, நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்துடன் வெளிப்படைத் தன்மையாகநோட்டீஸ் அடித்து ஒட்டுவேன்' என்று கூறி இருந்தேன்.
போஸ்டர் அடித்து ஒட்டிய சமூக ஆர்வலர்
- `வெற்றிபெற்றாலும், தோற்றாலும் என்னுடைய தேர்தல் செலவு அறிக்கையை வெளிப்படையாக வெளியிடுவேன்' என்று சொல்லியிருந்தேன். அதைத்தான் செய்திருக்கிறேன். ஆனால், இங்கு வெற்றி பெற்றவர்கள் இதுபோன்ற தேர்தல் செலவு அறிக்கையை வெளியிடுவார்களா?மாட்டார்கள். ஊராட்சியில் மொத்தமுள்ள 1,500 வாக்குகளில் 27 வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது. எனக்குக் கிடைத்த வாக்கு எண்ணிக்கையைவிட நான் ஊராட்சி மக்களின் நலனுக்காக நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகம். என்னுடையகுடும்பத்தைத் தவிர சொந்த சமூகத்தினரே எனக்கு வாக்களிக்கவில்லை. ஆனாலும், இதோடு துவண்டு விட மாட்டேன். இன்னும் வேகமாக சமூகப்பணியைத் தொடருவேன்" என்கிறார்.
கருத்துகள்